Wednesday, July 21, 2010

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சம்பளம் ஐந்து மடங்கு உயர்கிறது

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சம்பளம் ஐந்து மடங்கு உயர்கிறது
துடில்லி : விலைவாசி உயர்வால், பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகிக் கொண்டிருக்கும் நிலையில், பார்லிமென்டின் மழைக்கால கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட வேண்டிய மசோதாக்களில், எம்.பி.,க்கள் சம்பள உயர்வு மசோதாவுக்கு முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது.பார்லிமென்டின் மழைக்காலக் கூட்டத் தொடர், வரும் 26ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 27ம் தேதி முடிகிறது. இக்கூட்டத்தொடரில் 110 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன.இவற்றில், எம்.பி.,க்களின் சம்பளத்தை 16 ஆயிரம் ரூபாயிலிருந்து 80,001 ரூபாயாக உயர்த்தக் கோரும் மசோதாவுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காக அளிக்கப்படும் உதவித் தொகை ஆயிரம் ரூபாயை, இரண்டாயிரம் ரூபாயாகவும், அலுவலக உதவித் தொகைகளை அதிகரிக்கும்படியும் இம்மசோதாவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அணுஉலை விபத்து இழப்பீட்டு மசோதா, நீதித்துறை தரம் மற்றும் பொறுப்பு மசோதா, வகுப்புவாத வன்முறை மசோதா, விமானக் கடத்தல் தடுப்பு(திருத்தம்) மசோதா-2010, ரசாயன ஆயுத (திருத்தம்) மசோதா ஆகிய மசோதாக்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ஆனால், ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்ட மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா, இம்முறை லோக்சபாவில் நிறைவேற்றப்படுமா என்பது சந்தேகத்துக்கு இடமாகவே உள்ளது. இதற்கிடையில் நேற்று கூட்டத் தொடர் குறித்து பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் பி.கே. பன்சால், அனைத்து அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் செயலர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் பங்கேற்றார்.அதே சமயம் விலைவாசி உயர்வுப் பிரச்னை மட்டும் இன்றி, பாகிஸ்தானுடன் நடந்த பேச்சில் ஏற்பட்ட பின்னடைவு மற்றும் ரயில் விபத்துகள் உட்பட பல பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன

No comments:

Post a Comment