செய்திகள் சுவாசிப்பது
Wednesday, July 21, 2010
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சம்பளம் ஐந்து மடங்கு உயர்கிறது
துடில்லி : விலைவாசி உயர்வால், பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகிக் கொண்டிருக்கும் நிலையில், பார்லிமென்டின் மழைக்கால கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட வேண்டிய மசோதாக்களில், எம்.பி.,க்கள் சம்பள உயர்வு மசோதாவுக்கு முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது.பார்லிமென்டின் மழைக்காலக் கூட்டத் தொடர், வரும் 26ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 27ம் தேதி முடிகிறது. இக்கூட்டத்தொடரில் 110 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன.இவற்றில், எம்.பி.,க்களின் சம்பளத்தை 16 ஆயிரம் ரூபாயிலிருந்து 80,001 ரூபாயாக உயர்த்தக் கோரும் மசோதாவுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காக அளிக்கப்படும் உதவித் தொகை ஆயிரம் ரூபாயை, இரண்டாயிரம் ரூபாயாகவும், அலுவலக உதவித் தொகைகளை அதிகரிக்கும்படியும் இம்மசோதாவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அணுஉலை விபத்து இழப்பீட்டு மசோதா, நீதித்துறை தரம் மற்றும் பொறுப்பு மசோதா, வகுப்புவாத வன்முறை மசோதா, விமானக் கடத்தல் தடுப்பு(திருத்தம்) மசோதா-2010, ரசாயன ஆயுத (திருத்தம்) மசோதா ஆகிய மசோதாக்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ஆனால், ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்ட மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா, இம்முறை லோக்சபாவில் நிறைவேற்றப்படுமா என்பது சந்தேகத்துக்கு இடமாகவே உள்ளது. இதற்கிடையில் நேற்று கூட்டத் தொடர் குறித்து பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் பி.கே. பன்சால், அனைத்து அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் செயலர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் பங்கேற்றார்.அதே சமயம் விலைவாசி உயர்வுப் பிரச்னை மட்டும் இன்றி, பாகிஸ்தானுடன் நடந்த பேச்சில் ஏற்பட்ட பின்னடைவு மற்றும் ரயில் விபத்துகள் உட்பட பல பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன
பொன்னேரி:கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை வரும் 31ம் தேதி முதல்வர் கருணாநிதி திறந்து வைக்க உள்ளார். சென்னை அடுத்த மீஞ்சூர் அருகேயுள்ள காட்டுப்பள்ளி கிராமத்தில் சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் வடிகால் வாரியமும், ஐ.வி.ஆர்.சி.எல்., என்ற இந்திய நிறுவனமும், பேபசா என்ற ஸ்பெயின் நாட்டு நிறுவனமும் இணைந்து கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டத்தில் ஈடுபட்டன. இதற்காக 600 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதன் கட்டுமான பணிகள் துரிதமாக நடைபெற்று வந்தன. துணை முதல்வர் அடிக்கடி நேரில் சென்று பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்தி வந்தார்.
மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வந்த திட்டப் பணிகள் தற்போது முடிவடைந்துள்ளன. இதன் மூலம் தினமும் 10 கோடி லிட்டர் கடல்நீர் குடிநீராக மாற்றப்பட்டு, சென்னை குடிநீர் வடிகால் வாரியத்தால் சென்னை மக்களுக்கு வழங்கப்படவுள்ளது.இத்திட்டத்தினை முதல்வர் கருணாநிதி வரும் 31ம்தேதி துவக்கி வைக்கிறார். துவக்க விழா ஏற்பாடுகள் குறித்தும், கடல்நீரை குடிநீராக்கும் திட்டப்பணிகள் குறித்தும், நேற்று காலை 9 மணிக்கு துணை முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டார்.
திட்டப்பணிகளை பார்வையிட்டு செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் "கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டப்பணிகள் முடிவடைந்துள்ளன. வரும் 31ம்தேதி தமிழக முதல்வரால் துவக்கப்படவுள்ளது.இதன் மூலம் சென்னை பெருநகர மக்களின் குடிநீர் தேவை முழு அளவில் பூர்த்தியடையும்' என்றார்.கடல்நீரை குடிநீராக மாற்றும் திட்டப்பணிகளை பார்வையிட்டு, அங்கிருந்து 18,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் செயற்கை துறைமுகம், ராணுவ தளம் மற்றும் கப்பல் கட்டும் தளம் ஆகிய பணிகளையும் அவர் பார்வையிட்டார்.
கோல்கட்டா : ரயில் விபத்து காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்ய முடியாது என்று மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். மேற்கு வங்க மாநிலம் சயிந்தியாவில் இரண்டு ரயில்கள் மோதி கொண்ட விபத்தில் 66 பேர் பலியானர்கள். இதன் காரணமாக மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் மம்தா பானர்ஜி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்கட்சிகள் வலியுறுத்தின. இந்நிலையில் இன்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த ரயில்வேத்துறை அமைச்சர் மம்தா தனது பதவியை ராஜினாமா செய்ய முடியாது என்று கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது : இந்த ரயில் விபத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சதி வேலையாக இருக்கலாம் என்றும், இந்த விபத்துக்கள் சதி என்று நிருபிக்கப்பட்டால் தனது பதவியை ராஜினாமா செய்யத்தயார் என்றும் கூறினார். மேலும் அவர், இந்த ரயில் விபத்துக்கு சதி காரணம் என்றும், மார்க்சிஸ்ட் கட்சியினர் தான் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் ஞானேஸ்வரி ரயில் விபத்தும், சயிந்தியா ரயில் விபத்தும் அதிகாலை 2 மணிக்கு தான் நடந்துள்ளதாகவும், இது விசாரிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.
சென்னை : விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாத மத்திய, மாநில அரசுகளுக்கு கண்டனம் தெரிவித்து திருச்சியில் அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்என அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். கோவையில் அ.தி.மு.க., நடத்திய பொதுக்கூட்டம் பிரமாண்டமாக அமைந்தது. கோவை பொதுக்கூட்டம் தூள் கிளப்பி வெற்றி கண்டதை அடுத்து , திருச்சி ஆர்ப்பாட்டத்துக்கும் அவரே தலைமை தாங்கி நடத்தப்போவதாக அறிவித்துள்ளார்.
ஆர்ப்பாட்டம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் : அத்தியாவசியப் பொருட்களின் விலை தாறுமாறாக அதிகரித்துள்ளது. இதனால் சாதாரண மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையினரின் அச்சுறுத்தலால் கடலுக்குள் சென்று மீன்பிடிக்க முடியாமல் தமிழக மீனவர்கள் அச்சத்தில் இருக்கின்றார்கள். காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்படாததால் காவிரி ஆற்றுத் தண்ணீரை நம்பி நடவு செய்யப்பட்ட பயிர்கள் வாடியதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மணல் கொள்ளை காரணமாக ஆறுகளின் தரைமட்டம் கீழே இறங்கி உள்ளதால், தண்ணீர் வரும் போதும் பாசன வாய்க்கால்களில் தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. கடுமையான மின்வெட்டு மக்களை வாட்டி வதைக்கிறது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலைகளும் கடுமையாக உயர்த்தப்பட்டுவிட்டன. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தி.மு.க. அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை. இவற்றை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் 24.8.2010 அன்று, திருச்சி மாநகரில் எனது தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.